தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்ற காரணத்தால் அனைத்து பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது, இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி கோவை காளப்பநாயக்கன் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியான ஸ்ரீ ரங்கநாதர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி அனைத்து மாணவர்களுக்கும் அலைபேசி வாயிலாக சனிக்கிழமை பெற்றோர்கள் சந்திப்பு மற்றும் முழுநேர பள்ளி உள்ளது என அனைவருக்கும் செய்தி அனுப்பி உள்ளது. இதனை நம்பி இன்று காலை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிக்கு வர தொடங்கினர்.
மேலும் பள்ளி வாகனமும் மாணவர்களை ஏற்றி வர சென்று உள்ளது. அரசு அறிவிப்பை மீறி இன்று பள்ளி உள்ளது என கூறிய பள்ளி நிர்வாகம் காலை 08.00 மணிக்கு, மற்ற பள்ளிகள் விடுமுறை என தெரிந்த பின்னர் மாணவர்களுக்கு விடுமுறை என மெத்தனபோக்கோடு சொல்லி மாணவர்களை வீட்டுக்கு போக சொல்லியது. பள்ளி நிர்வாகத்தின் செயலால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கடும் அவதிக்குள்ளாகினர். இதனைபற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட பொழுது மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு பற்றி எங்களுக்கு தெரியவில்லை என்றும், இரவு 10.00 மணிக்கு தான் தெரிந்தது என்றும் அப்போது மாணவர்களின் பெற்றோர்களுக்கு தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்ப முடிய வில்லை என தெரிவித்துள்ளது.
இது குறித்து தொடர்ந்து பேசிய பள்ளி நிர்வாகம், எங்களது பள்ளியில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் வீடுகளில் ஆண்ட்ராய்டு தொலைபேசி இல்லை. மேலும் வீடுகளுக்கு நேரடியாக சென்று சொல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறியது. ஆயிரம் காரணங்கள் கூறினாலும் இன்று பள்ளி உள்ளது என பல மைல் தூரத்தில் இருந்து காலை 06.00 மணி முதல் பேருந்து மூலம் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.