ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சேவல் சண்டைக்கு நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், “சேவல் சண்டைபோடும்போது சூதாட்டம் நடத்தப்படமாட்டாது, சேவல்கள் துன்புறுத்தப்படமாட்டாது என உத்தரவாதம் அளித்ததால் சேவல் சண்டை நடத்த அரசுக்கு உத்தரவிட்டது. அரசுத் தரப்பும் இதனைப் பரிசீலிப்பதாக தெரிவித்திருந்தது.
அதன்படி சேவல்களுக்கு துன்புறுத்தல் கொடுக்கக் கூடாது; போட்டியின் போது ஒரு கால்நடை மருத்துவர் இருக்க வேண்டும்; சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது; சேவல்களுக்கும் மது உள்ளிட்ட போதை வஸ்துக்கள் எதுவும் கொடுக்கக் கூடாது; சேவல்களின் கால்களில் கத்தி கட்டக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து சேவல் சண்டைகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. நிபந்தனைகளை மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.