தமிழகம் உட்பட 17 மாநிலத்தில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2- ஆம் தேதி உடன் முடிவடைகிறது. திமுக மற்றும் அதிமுகவில் தலா 3 ராஜ்யசபா சீட்டுகளுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார். அப்போது மாநிலங்களவை தேர்தலில், தேமுதிகவுக்கு ஒரு சீட்டு வழங்குவது குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. சீட் வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.