இமாச்சலப்பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் மற்றும் ஓட்டுநர் டென்சிங் உள்ளிட்ட 3 பேர் கடந்த 4 ஆம் தேதி (04.02.2024) மாலை காரில் பயணம் செய்தனர். அப்போது இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது.
இந்த விபத்தில் சிக்கி காரில் வெற்றி துரைசாமியுடன் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் சிக்கிப் பலியான கார் ஓட்டுநர் டென்சிங் சடலமாக மீட்கப்பட்டார். அதே சமயம் இந்த விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியை மத்தியப் பிரதேச போலீசார், ராணுவ வீரர்கள், ஸ்கூபா டைவிங் வீரர்கள் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப்படையினர் என 100க்கும் மேற்பட்டோர் மூலம் தொடர்ந்து தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இதனையடுத்து கடந்த 8 நாட்களாக நடைபெற்ற தேடுதலுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் நேற்று (12.02.2024) மீட்கப்பட்டது. இமாச்சல் காவல்துறை துணை ஆணையர் அமித் ஷர்மா இந்தத் தகவலை உறுதிப்படுத்தி இருந்தார். மீட்கப்பட்ட அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் வெற்றி துரைசாமியின் உடல் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து இன்று (13.02.2024) சென்னை கொண்டு வரப்படுகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் தியாகராயநகரில் உள்ள மயானத்தில் வெற்றியின் உடல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெற்றி துரைசாமி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், “இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன். எந்தவொரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத, எதிர்கொள்ள இயலாத துயரம் இது. உயிருக்கு உயிரான மகனை இழந்து தவிக்கும் சகோதரர் சைதை துரைசாமிக்கு இத்துயர்மிகு நேரத்தில் எனது இதயப்பூர்வமான ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.