கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்தாலும், எந்த நோய் பாதிக்கப்பட்டு வந்தாலும் உங்களைக் காப்பாற்றவும் கனிவாக கவனித்துக் கொள்ளவும் நாங்கள் இருக்கிறோம். அதனால் நீங்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். நீங்கள் வெளியே வரமால் இருப்பதே கரோனாவுக்கான சிறந்த மருந்து என்று மருத்துவர்களும், செவிலியர்களும் அன்புக் கட்டளையிட்டு களப்பணியாற்றி வருகிறார்கள்.
வருவாய்த் துறை, சுகாதாரத்துறை, காவல்துறை என ஒருபக்கம் கணக்கெடுத்துக் கொண்டு அவர்களைக் கண்காணிக்கும் பணியிலும், கடும் வெயிலிலும் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க போலீசார் வீதி வீதியாகச் சுற்றி வருவதையும் காண முடிகிறது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய ஒரு லட்சம் பேருக்கு மேல் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, ஆயிரக்கணக்கான வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளது.
மற்றொரு பக்கம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என்று தெருக்கள் தொடங்கி, வீடுகள் வரை அத்தனையும் சுத்தமாக இருக்க வேண்டும் சுத்தமின்மையால் நோய்க் கிருமிகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக இரவு பகலாகக் கைகளில் கையுறை, முகக் கவசம் கூட இல்லாமலும் கூட சுத்தம் செய்வது, கிருமி நாசினிகளத் தெளிப்பது என்று தங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள் துப்புரவுப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள்.
இப்போது மக்கள் உணருகிறார்கள். இவர்களால் தான் நோய்த் தொற்று இல்லாமல் நாம் நிம்மதியாக இருக்க முடிகிறது என்பதை, இப்படி உணர்ந்தவர்கள் கடந்த சில நாட்களாகத் துப்புரவுப் பணியாளர்கள் கால்களைக் கழுவி பாத பூஜைகளும் செய்வதுடன் அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதுடன் உணவுப் பொருட்களும் வழங்கி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் தெருக்களைக் கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்த துப்புரவுப் பணியாளர்களை அழைத்துச் சாலையில் வைத்தே தன் குடும்பத்துடன் அவர்களின் பாதங்களைக் கழுவி மலர் தூவி பாத பூஜை செய்த தி.மு.க பிரமுகர் செந்தில்குமார். அதேபோல கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து பொதுமக்களுக்கு மூலிகை ரசம், நாட்டு மாட்டு ஹோமியம், காய்கறிகள் வழங்கி வந்த சமூக ஆர்வலர் மூர்த்தி, தன் தந்தை இறந்து சில நாட்களே ஆன நிலையில் மீண்டும் களப்பணிக்கு வந்து நகரத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வரும் பலரையும் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு கைத்தறி துண்டு அணிவித்து அனைவருக்கும் காய்கறி பைகளை வழங்கினார்.
இப்படிக் கடந்த சில நாட்களாக துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து கௌரவிக்கப்படுகிறார்கள். இது குறித்து துப்புரவுப் பணியாளர்கள் கூறும் போது, "இத்தனை வருடங்களும் எங்களை ஒரு புழு போல பார்ப்பார்கள். ஆனால் நாங்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. எங்கள் பணி நகரைச் சுத்தமாக வைத்து மக்களுக்கு நோய் வராமல் பாதுகாப்பது. அதைச் செய்து கொண்டே இருக்கிறோம். இப்ப கரோனா வந்த பிறகு எங்களையும் மதித்து மரியாதை செய்கிறார்கள் என்னும் போது எங்களுக்கே வியப்பாக உள்ளது. இந்த மக்களுக்காக இன்னும் நிறைய செய்வோம்" என்கிறார்கள்.