Skip to main content

திருமண நாளில் சிறுமி குழந்தை பெற்ற விவகாரம்; காமக்கொடூரன்கள் இருவர் போக்சோ சட்டத்தில் கைது!

Published on 02/09/2018 | Edited on 02/09/2018
baby


சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள சத்யா நகர் காலனியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைலம்பட்டியைச் சேர்ந்த ஓர் இளைஞருக்கும் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் அந்தச் சிறுமிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது.

இது ஏதோ மாதவிலக்கு பிரச்னையால் ஏற்பட்ட வயிற்று வலியாக இருக்கலாம் எனக்கருதிய மணமகன் வீட்டார், உடனடியாக சிறுமியை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினர்.

மருத்துவர்கள் கூறியதைக் கேட்ட மணமகன், அவருடைய உறவினர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். மேல்சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிறுமியை சேர்த்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு அன்று இரவே அழகான ஓர் ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் நடந்த அன்றே சிறுமிக்கு குழந்தை பிறந்த தகவல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி தகவல் அறிந்த கொளத்தூர் கால்துறையினர் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

சிறுமி தன் பெற்றோருடன் பல இடங்களுக்கு கூலி வேலைக்குச் சென்று வந்தார். அப்போது கூலித் தொழிலாளர்களான கருங்கல்லூரைச் சேர்ந்த சின்ராஜ் (30), பிரபு (25) ஆகிய இருவரும் சிறுமியிடம் ஆசை வார்த்தைகூறி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் சின்ராஜிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காப்பதற்கான சிறப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் அவர்கள் இருவரும் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

சார்ந்த செய்திகள்