
தமிழக சட்டசபையில் நிறைவேறிய பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, ஆளுநர், முதல்வரை அழைத்து மசோதா குறித்து உரிய விளக்கம் கேட்டு, சுமுகமாக பேசி முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஆளுநர் ரவி, தமிழக முதல்வரை சந்திப்பதற்காக அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் மழை வெள்ளம் காரணமாக அந்த சந்திப்பு நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கவுள்ளார்.
ஜனவரி மாதம் கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆளுநருடன் பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோன்று, ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.