







மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31/03/2022) காலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். அத்துடன், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது துறைச் சார்ந்த கோரிக்கைகளை மத்திய அமைச்சர்களிடம் தமிழக முதலமைச்சர் முன் வைத்தார். மேலும், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கினார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தி.மு.க.வின் மக்களவை உறுப்பினர்களும், அதன் கூட்டணிக் கட்சியின் உறுப்பினர்களும் வரவேற்றனர். பின்னர், அவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். மேலும், முதலமைச்சருடன் மக்களவை உறுப்பினர்கள் செல்பி புகைப்படங்கள் மற்றும் குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியின் அகில இந்திய இடைக்கால தலைவர் சோனியா காந்தி எம்.பி.யை முதலமைச்சர் சந்திதார். அப்போது, வணக்கம் சொல்லவே வந்தேன், சனிக்கிழமை, நடைபெறவுள்ள டெல்லி தி.மு.க. அலுவலகம் திறப்பு விழாவில் சந்திக்கிறேன் என்று சோனியா காந்தியிடம் கூறினார் முதலமைச்சர்.