Skip to main content

தொடர் சர்ச்சையில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள்; மேலும் ஒரு வழக்கு

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

Chidambaram Nataraja temple dikshitars in ongoing controversy; One more case

 

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தைச் சேர்ந்த சிவ பக்தர் கார்வண்ணன் என்பவர் தரிசனம் செய்ய வந்துள்ளார். 61 வயதான இவர் கோவில் 21-ம் படி அருகே சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது கோவில் தீட்சிதர்களான கனக சபாபதி மற்றும் வத்தன் ஆகிய இருவரும் கார்வண்ணனைத் தரக்குறைவாகப் பேசி கீழே தள்ளிவிட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கார்வண்ணன், சிதம்பரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 2 தீட்சிதர்கள் மீதும் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த கார்வண்ணன், சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கார்வண்ணன், ”தன்மையாக பேச வேண்டும். என் சுயமரியாதைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். என்னால் எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாத போது அநாவசியமாக விரட்டுவது, எதேச்சதிகாரமாக நடந்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதே மாதிரி தான் அனைவரிடமும் அவர் நடந்து கொள்கிறாரா? அவர் சர்வாதிகாரத்தை காட்டுகிறாரா? அவரது ஆணவத்தை இது வெளிப்படுத்துகிறது” என கூறினார்.

 

ஏற்கனவே குழந்தை திருமணம், பக்தர்களைத் தாக்கியது, சக தீட்சிதர்களை தாக்கியது என பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் தற்போது சிவ பக்தரை தாக்கிய புகாரிலும் சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் சிக்கியுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நடராஜர் கோவிலில் திருமஞ்சன தேர்த்திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த வாரம் (17 ஆம் தேதி) நடந்தது. வரும் 25 ஆம் தேதி ஆனி திருமஞ்சன தேர்த் திருவிழாவும், 26 ஆம் தேதி தரிசன விழாவும் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சிவ பக்தர்கள் பொதுமக்கள்  லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். திருவிழாவிற்கான கோலாகலம் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் பலரும் வந்து சிதம்பரம் நடராஜரை தரிசித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உழவாரப் பணிகள் குறித்து ஆய்வு

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 study on tillage work at Chidambaram Natarajar temple

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் கோட்ட பொறியாளர் அசோகன் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் செந்தில்வேலன், மண்டல ஸ்தபதி, கோயில்கள் ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் அடங்கிய கோயில் உழவாரப் பணிகள் குறித்த நிலையான ஆய்வுக் குழுவினர் கோயிலில் பல்வேறு இடங்களில் கோயில் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது. சுத்தமாக உள்ளதா? என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இவர்கள் தெற்கு கோபுர வாயில், மேல கோபுர வாயில், கோயில் உட்பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இது குறித்து இணை ஆணையர் பரணிதரன், கோயில்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வு செய்ததாகவும் இது குறித்த தகவலையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கோவில்களில் வெளி பிரகாரங்களில் கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதையும், தெற்கு வீதி, கீழ வீதி கோபுரம் அருகில் மாட்டு தொழுவம் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு மாட்டு சாணிகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்காமல் அவதிப்படுவதாக உழவார பணிகள் ஆய்வுக் குழுவினரிடம் தெரிவித்தனர். இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார்கள்.

முன்னதாக ஆய்வுக் குழுவினர் கோயிலுக்கு உள்ளே வரும்போது இது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இந்து அறநிலையத்துறைக்கும் கோயிலுக்கும் சம்பந்தம் இல்லை. இங்கு உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்வது கண்டிக்கத்தக்கது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இது உள்நோக்கம் கொண்டது என கோயில் தீட்சிதர்களின் செயலாளர் ஆய்வு குழுவினரிடம் கடிதம் அளித்துள்ளார். கோயிலில் உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்தது கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

‘சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்க’ - உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Nataraja Temple administration to submit income and expenditure account  orders High Court

சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் சிதம்பரம் நடராஜர் கோவிலின் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியிலும், கோவிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களிலும் எந்த அனுமதியுமின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்குத் தடை விதிக்கக் கோரியும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அறநிலையத்துறையின் மனுவில், பழமையான கோவில்களில் எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ளக்கூடாது என உயர்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளபோதும், அதை மீறி ஆறு அடிக்கு மேல் தோண்டப்பட்டுள்ளதாகவும், எந்த மாதிரியான பணிகள் நடக்கின்றன என்பதே தெரியவில்லை எனவும், கோவிலுக்குள் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு அமர்வின் முன்பாக நடைபெற்று வந்தது. பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் கடைகளோ அன்னதான கூடமோ கட்டவில்லை என்றும், தற்காலிக அமைப்பில் அலுவலகம் தான் செயல்படுகிறது என விளக்கம் அளித்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, புராதனமிக்க எந்த கோவிலிலும் அனுமதியின்றி எவரும் கை வைக்க நீதிமன்றம் அனுமதிக்காது என்றும், கோவில்கள் பக்தர்களுக்கானது மட்டுமே என்றும், வேறு நோக்கத்தில் யாரும் கை வைத்தால் அவர்களை இந்த நீதிமன்றம் தடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தது உயர்நீதிமன்றம்.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், ஆருத்ரா தரிசன அறக்கட்டளை ஆகியவற்றின் கடந்த 3 ஆண்டு வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீட்சிதர்கள் சபைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.