செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தைச் சேர்க்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று (28/07/2022) மாலை 05.30 மணிக்கு நடைபெறும் விழாவில், மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உள்ளிட்ட கலந்துக் கொள்கின்றனர்.
இதனிடையே, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக, தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான செலவை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த விளம்பரங்களில் தமிழக முதலமைச்சரின் படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பா.ஜ.க.வினர், அந்த விளம்பர பலகையில் பிரதமர் நரேந்திர மோடியின் போஸ்டரை ஒட்டினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரையும், படத்தையும் சேர்க்கக்கோரி, மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா என்பவரது தரப்பில் வழக்கறிஞர் சண்முகநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, மனுவை வழக்காக தாக்கல் செய்யவும், இன்று (28/07/2022) மதியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், உயர்நீதிமன்றக் கிளை தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.