சென்னை திருவல்லிக்கேணி டி.பி.கோயில் பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 32). ராயப்பேட்டையில் பட்டயக்கணக்கர் படிப்புகளுக்கான பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது நிறுவனத்தில் படிக்கும் மாணவ மாணவிகள் ஐபிஎல் போட்டியை பார்க்க விரும்பி உள்ளனர். இதனால் கடந்த 6 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கான போட்டிக்கான டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக பெற முயன்றுள்ளார். அப்போது ஆன்லைனில் டிக்கெட் கிடைக்காததால் போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் உள்ள டிக்கெட் வழங்கும் கவுண்டர் மூலம் பெற நேரடியாகச் சென்றுள்ளார். ஆனால் அங்கும் கூட்டம் அலைமோதியதால் அவரால் அங்கும் டிக்கெட் பெற முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஐபிஎல் பெயரில் இருந்த வலைதள பக்கத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனைக்கு இருப்பதை பார்த்த அருண் அந்த பக்கத்தை தொடர்பு கொண்ட போது வினோத் யாதவ் என்பவர் அருணிடம் தன்னிடம் ஐபிஎல் டிக்கெட் இருக்கிறது என்று கூறியுள்ளார். டிக்கெட்டுக்கான பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தினால் இணைய வழியிலான டிக்கெட் அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளார். அதனை நம்பிய அருண் குமார் 20 டிக்கெட்களுக்கான கட்டணமாக 90 ஆயிரம் ரூபாயை இணையதளம் மூலம் செலுத்தி உள்ளார். ஆனால், அவர் கூறியபடி ஐபிஎல் டிக்கெட் கொடுக்காமல் வினோத் யாதவ் ஏமாற்றி உள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அருண் குமார் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு வினோத் யாதவ் பணத்தை தர முடியாது என்று கூறியுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் அருண் குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.