கோடை விடுமுறையை கழிக்க சுற்றுலா சென்ற பள்ளி மாணவி ஒருவர் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண் முன்னே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகரில் வசித்து வருபவர் நிக்சன் (வயது 47). கார் டிரைவரான இவருக்கு கிருஷ்ணமாலா என்ற மனைவியும், பெமினா (வயது15) என்ற மகளும், டெலான் ஆண்டர்சன் என்ற மகனும் உள்ளனர். பெமினா சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
பெமினா 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி உள்ள நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நிக்சன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் தேனி மாவட்டம் கம்பம் அடுத்துள்ள சுருளி அருவிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு இவர்கள் அனைவரும் அருவியில் குளித்தனர்.
இதைத் தொடர்ந்து பெமினாவுடன் சுற்றுலா சென்ற அனைவரும் அருவியில் இருந்து தங்களது கார் நின்ற இடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராத விதமாக வழியில் இருந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று திடீரென முறிந்து பெமினா மீது விழுந்தது. இதனால் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பெமினா பரிதாபமாக உயிரிழந்தார்.
பெற்றோர் கண் முன்னே மகள் உயிரிழந்ததைக் கண்டு மாணவியின் பெற்றோர் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.