சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து சென்னை பெண்ணுக்கும் ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நேற்று வெளியே வந்தது.
மாங்காடு பகுதியை சேர்ந்த லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் பெண்மணிக்கு கே.எம்.சி மருத்துவமனையில் இரத்தம் ஏற்றியபோது ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்டதாகவும், ஆனால் அதனை வெளியே சொன்னால் தம்மை ஒதுக்கிவிடுவார்களோ என்று அஞ்சி வெளியே சொல்லாமல் இருந்ததாகவும் தெரிவித்தார். சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்டுள்ள விஷயம் வெளியே வந்ததை தொடர்ந்து அவரும் தன் விஷயத்தை வெளியே சொல்லியுள்ளார். அவர் இன்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில், தனக்கு ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றிய கே.எம்.சி டீன் மற்றும் மற்ற பணியாளர்கள் மீது புகார் அளித்தார். அவர் அளித்த புகார் கடிதத்தின் விவரங்கள்.
'முதல் மாதம் எனக்கு எல்லா விதமான இரத்த பரிசோதனையும் செய்யப்பட்டது. அதன் பின்னர் 8.3.2018 அன்று மருத்துவர் என்னை மீண்டும் இரத்த பரிசோதனை செய்துவரும்படி அறிவுறுத்தி, அவர்களே முத்துக்குமரன் மருத்துவமனையில் காசு குறைவாக இருக்கும் என்று அனுப்பினார்கள். நானும் அங்கு சென்று பரிசோதித்தேன். அப்போது, எனக்கு ஹெச்.ஐ.வி இல்லை என்று முடிவுகள் வந்தது. பின் 5.4.2018-ல் மாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்றேன். அவர்கள் என் உடம்பில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளது என்று 108 ஆம்புலன்ஸ் மூலம் கே.எம்.சி. அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டேன். அங்கு மருத்துவர்கள் என் ரிப்போர்ட்களை பார்த்துவிட்டு இரத்தம் ஏற்றினார்கள். பின் 15 நாட்கள் கே.எம்.சி மருத்துவமனையில் நோயாளியாக இருந்துவிட்டு அதன் பின் மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற போது ஹீமோகுளோபின் சரியாக உள்ளது என்று சொல்லி அனுப்பிவிட்டனர். அதன் பின் 13.8.18 அன்று ஸ்கேன் எடுக்க சொன்னார்கள். எடுத்தபின்னர், குழந்தையின் தலை மேலே உள்ளது உடனே கே.எம்.சி மருத்துவமனையில் அட்மிட்டாகச் சொன்னார்கள். நானும் அங்கு சென்றேன். அங்கு இரத்த பரிசோதனை செய்துவிட்டு எனக்கு ஹெச்.ஐ.வி உள்ளது என்று கூறினார்கள். அதன் பின் நானும் என் கணவரும் ஆலோசனைக்கு அழைத்து செல்லப்பட்டோம். அங்கு எங்கள் வாழ்க்கையை இப்படி செய்துவிட்டீர்கள் என்று சண்டை போட்டுவிட்டு வந்துவிட்டோம். அதன்பின்னர் 15.9.18 அன்று மீண்டும் கே.எம்.சி மருத்துவமனையில் குழந்தை பெறவேண்டி அனுமதிக்கப்பட்டேன். அன்றே அறுவைசிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அங்கு உள்ளவர்கள் டாக்டர்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும், சுகாதாரதுறைக்கு மனு அளிக்கும்படியும் சொன்னார்கள். நானும் மனு அளித்தேன். ஆனால், இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனக்கு ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றிய கே.எம்.சி. டீன் மீதும், மற்ற பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் அளித்துள்ளார்.