கடலூர் சிப்காட் பகுதியில் ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பல சுற்றுப்புற சூழலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இந்த நிலையில் ‘டாக்ரோஸ்’ எனப்படும் ரசாயன தொழிற்சாலையில் இன்று பகல் நேரத்தில் பாயிலர்கள் பராமரிப்பு பணி நடைபெற்றது. இரவு அதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்பொழுது பாயிலருக்கு செல்லும் குழாய் பயங்கர சட்டத்துடன் வெடித்து அந்த தொழிற்சாலையிலிருந்து வெண்புகை வெளியேறியுள்ளது.
இந்த புகை அந்த பகுதி முழுவதும் சூழ்ந்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. உடனடியாக தொழிற்சாலைக்கு வந்த மக்கள் அங்கு இருந்த அதிகாரியிடம் என்னவென்று கேட்டபோது அதிகாரிகள் சரியான பதில் கூறவில்லை என தெரியவருகிறது. நேரம் செல்ல செல்ல கண் எரிச்சலுடன் தலைச்சுற்றலும் வந்ததால் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக இருக்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் வந்து ஆய்வு மேற்கொள்வதாக தெரிவித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் அடிக்கடி இதுபோன்று விபத்துகள் ஏற்படுவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.