சட்ட விரோதமாகச் செயல்படும் 134 இறால் பண்ணைகளை உடனடியாக அரசு மூட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் சட்ட விரோதமாக அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை மூட வேண்டும் எனப் புகார் எழுந்தது. இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு அங்கு அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை மூட மீன்வளத்துறை உதவி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இறால் பண்ணை உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, மத்திய அரசின் கடலோர மீன் வளர்ப்பு ஆணைய சட்டத்தின்படி கடலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இறால் பண்ணைகள் அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் மனுதாரர்கள் அமைத்துள்ள இறால் பண்ணைகள் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளது. மேலும் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டு வருகிறது. எனவே அந்த பண்ணைகளை மூடுவதற்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2,709 பண்ணைகளில் 2,227 இறால் பண்ணைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டவை. 348 பண்ணைகளின் விண்ணப்பங்கள் தற்பொழுது வரை நிலுவையில் உள்ளது. 134 இறால் பண்ணைகள் சட்ட விரோதமாக அனுமதி பெறாமல் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, சட்ட விரோதமாகத் தமிழகம் முழுவதும் இயங்கும் இறால் பண்ணைகளை உடனடியாக மூட வேண்டும். ஆறு வாரத்திற்குள் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும். அவ்வாறு மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.