இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சிவகங்கை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிட்டவர் தேவநாதன் யாதவ். இவர் சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதி தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் இந்த நிதி நிறுவனத்தில் மோசடி செய்ததாக தேவநாதன், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமைநாதன், தேவசேனாதிபதி மற்றும் சுதீர்சந்தர் ஆகிய 7 மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து சாலமன் மோகன்தாஸ் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (13.11.2024) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ. 24 கோடியே 50 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தேவநாதன், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமைநாதன், தேவசேனாதிபதி மற்றும் சுதீர்சந்தர் ஆகிய 7 மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் சாலமன் மோகன்தாஸ் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் இருந்து வருகின்றனர். இந்த வழக்கில் 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் 1173 பேர் முதலீடு செய்துள்ளனர். முதலீடுகளின் முதிர்வு காலம் நிறைவடைந்ததும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டித் தொகையுடன் 37 கோடி ரூபாய் வழங்கப்படவில்லை. எனவே இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.