சென்னை தியாகராயர் நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த நிகழ்ச்சியில், இந்துத்துவா சிந்தனையாளரும், ஆன்மீக பேச்சாளரும், வி.எச்.பி. முன்னாள் மாநிலத் துணைத் தலைவருமான ஆர்.பி.வி.எஸ். மணியன் சட்ட மேதை அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக இவர் மீது வி.சி.க. சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆர்.பி.வி.எஸ். மணியன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸார் ஆர்.பி.வி.எஸ். மணியனை, சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி உத்தரவிட்டிருந்தார். அப்போது ஆர்.பி.வி.எஸ். மணியன் தனது உடல்நிலை மற்றும் வயதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரமும் தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து ஆர்.பி.வி.எஸ். மணியன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் மணியன் மீது 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அரசு தரப்பில் 15 சாட்சிகள், 34 ஆவணங்களை இணைத்து போலீசார் இந்த குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர்.