ஈரோட்டில் சூரம்பட்டி அணைக்கட்டில் படர்ந்து உள்ள ஆகாயத்தாமரை அகற்றும் பணியை இன்று தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “மதுக்கடைகள் மூட வேண்டும் என்ற கொள்கையில் தி.மு.க.வுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 500 மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளது. ஆனால் மது விற்பனை அதிகரித்து வருவதாக தமிழக அரசு மீது தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நடைமுறையில் ஒரே நாளில் மதுக்கடைகளை பிரச்சனை ஏற்படும்.
மதுக்கடை மூடிய பிறகு அருகில் உள்ள மற்றொரு மதுக் கடைக்கு மது குடிப்பவர்கள் செல்வதால் விற்பனை அதிகமாக உள்ளது. இதுகுறித்து துறை ரீதியாக விழிப்புணர்வு, ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக தமிழகத்தில் மதுக்கடைகள் குறைக்கும் எண்ணம் அரசுக்கு உள்ளது. கண்டிப்பாகச் செய்வோம். கிராமங்களில் மதுக்கடைகள் வேண்டாம் எனக் கிராம மக்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அகில, இந்திய அளவில் மத்திய அரசு மதுவிலக்கு கொள்கையை கொண்டு வந்தால் அதனைச் செய்யத் தயாராக இருக்கிறோம். அதற்கு முன்பு முதல்வர் மதுக்கடைகள் மூடுவது குறித்து கணக்கு கேட்டு வந்துள்ளார். மதுக் கடை மூடுவது குறித்துக் கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம். விரைவில் பட்டியல் தெரியப்படுத்துவோம்.
பள்ளியில் மது குடிப்பது தவறான பழக்கம். இது குறித்து விழிப்புணர்வு செய்து வருகிறோம்.வீட்டு மனைகள் வரைமுறை படுத்த போதுமான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் கால அவகாசம் வழங்கப்படாது. சென்னையில் குறைந்த எண்ணிக்கையிலான வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளது. இனி வீடுகள் தேவை பொறுத்து தான் வீடுகள் கட்ட கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. 5 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை ஆகாமல் உள்ளது. தரமற்றது, விலை உயர்வு போன்ற காரணங்களால் வீடுகள் விற்பனை ஆகாமல் தான் உள்ளது.கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீரைத் திருட்டுத்தனமாக எடுப்பது குறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவது குறித்து தி.மு.க தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரிய நேரத்தில் அறிவிப்பார்” என்றார்.