திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அருகே நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களைக் குறிவைத்து செல்ஃபோன்களை கொள்ளையடிக்கும் சம்பவம் (ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்) தொடர் கதையாக இருந்துவந்தது.
இந்நிலையில் ஆம்பூர் அடுத்த வடகரை டாஸ்மாக் கடை அருகே செல்ஃபோன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்ற கார்த்திக் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரை உமராபாத் காவல்துறையினர் ஆகஸ்ட் 19 ஆம் தேதி கைது செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் ஆம்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தாங்கள் தான் செல்ஃபோன் கொள்ளையில் ஈடுபட்டதாகவும், செல்ஃபோன்களை கொள்ளையடித்துச் சென்று வாணியம்பாடியைச் சேர்ந்த கோபி மற்றும் கண்ணன் ஆகியோரிடம் கொடுத்து விற்பனை செய்ததாகவும் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக், வெங்கடேசன், கண்ணன், கோபி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 12 செல்ஃபோன்களை பறிமுதல் செய்துனர்.
நால்வரையும், ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கனிமொழி முன்பு ஆஜர்படுத்தி, 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.