
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயியான பெருமாள்(45). இவர், தனது வீட்டில் கடந்த 14ஆம் தேதி இரவு செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு படுத்து தூங்கினார். காலையில் எழுந்து பார்த்தபோது செல்போனை காணவில்லை. வீடு முழுக்க தேடியும் செல்போன் கிடைக்கவில்லை. அதே போல் அக்கம்பக்கம் வீடுகளிலும் செல்போன்கள் காணாமல் போயிருந்தன.
இந்நிலையில், பெருமாளின் செல்போனில் இருந்து அவரது மனைவிக்கு போன் வந்தது. அதில் பேசிய நபர், “உங்கள் செல்போன் என்னிடம் தான் உள்ளது. அது சம்பந்தமாக உங்கள் கணவரை என்னிடம் பேச சொல்லுங்கள்” என்று கூறியுள்ளார். உடனே மனைவியிடமிருந்து பெருமாள் போன் வாங்கி பேசியுள்ளார். அப்போது அந்த நபர், “உங்கள் செல்போன் உட்பட அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து நான்கு செல்போன்களை திருடியது நான்தான். நான் சூழ்நிலை காரணமாக திருடனாக மாறிவிட்டேன். செலவுக்கு சாப்பாட்டுக்கு பணம் வேணும். அதனால் இந்த தொழிலை செய்கிறேன். செல்போன் திருடப்பட்டதற்காக போலீஸிடம் போக வேண்டாம். அங்கே போனால் ஒரு பிரயோஜனமும் இருக்காது. அவர்கள் என்னிடம் இருப்பதை வாங்கிக் கொண்டு என்னை வெளியே அனுப்பி விடுவார்கள். இழப்பு உங்களுக்குத்தான். எனவே, நான் சொல்கிறபடி கேட்க வேண்டும். திருடி வந்த நாலு செல்போனுக்கும் ரூ. 15000 பணம் கொடுத்தால் செல்போனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்” என்று செல்போன் திருடன் கேட்டுள்ளான்.
அதற்கு பெருமாள் சரி பணம் ஏற்பாடு செய்கிறேன். எங்கே கொண்டு வந்து கொடுக்கணும் என்று கேட்டுள்ளார். அதற்கு செல்போன் திருடன், ஹோட்டல்ல எனக்கு டிபன் வாங்கிக்கிட்டு, நான் சொல்ற இடத்துக்கு நீங்க மட்டும் வாங்க. டிபனையும், பணத்தையும் ஒரு வெள்ளை பையில் போட்டு பைக்கில் கொண்டுவாங்க. நான் சொல்ற இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, திரும்பி போங்க. அதை நான் எடுத்துக்கிட்டு, உங்கள் போன்களை வண்டியில் வைத்துவிட்டு, டார்ச் லைட் அடித்து சிக்னல் கொடுப்பேன். பிறகு நீங்க உங்க வண்டியை எடுத்துக்கிட்டு போகலாம் என்று சொல்லியுள்ளான்.
இதற்கெல்லாம் ஒப்புக்கொண்ட பெருமாள், பண்ருட்டி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். திருடனின் திட்டத்தைப் பற்றியும் போலீசாரிடம் கூறினார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், திருடன் சொன்ன பகுதியில் மறைந்திருந்து திருடனை சுற்றி வளைத்தனர். அவனை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து நடத்தினர். விசாரணையில், செல்போன் திருடன் திண்டிவனத்தைச் சேர்ந்த அய்யனார் என்பதும், இதேபோன்று தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.