Skip to main content

“மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு வழக்கை பரிசீலிக்க வேண்டும்” - மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

"The case should be considered in the interest of senior citizens" - High Court instructs the Central Government

 

மூத்த குடிமக்களின் முதலீடுகளுக்கான வட்டியைக் குறைத்ததை எதிர்த்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த முதலீடுகளின் வட்டியை மட்டும் நம்பியிருக்கும் மூத்த குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. மூத்த குடிமக்கள் முதலீடுகளுக்கான வட்டியைக் குறைத்ததை எதிர்த்து வழக்கறிஞர் கார்த்திகா அசோக் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், கரோனாவுக்கு முன் மூத்த குடிமக்களின் டிபாசிட்களுக்கு 8.5 முதல் 9 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்ததாகவும், கரோனாவுக்குப் பின் இந்த வட்டித்தொகை 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, எந்த வருமானமும் இல்லாத மூத்த குடிமக்கள், இந்த டிபாசிட்கள் மூலம் கிடைக்கும் மாத வட்டியை மட்டுமே நம்பி வாழ்வதாக மனுதாரர் வாதிட்டார். இதையடுத்து, மூத்த குடிமக்கள் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், மூத்த குடிமக்கள் டிபாசிட்களுக்கு எவ்வளவு வட்டி வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால், இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை முடித்துவைத்தனர். அதேசமயம், இந்த முதலீடுகளின் வட்டியை மட்டும் நம்பியிருக்கும் மூத்த குடிமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்