பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் இணைந்து இன்று நாடு தழுவிய அளவில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் நுழைவு வாயில் முன்பு ஏ.யு.ஏ.பி சங்கம், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் உள்ள 14,917 டவர்களை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்தும், உடனடியாக 4 ஜி சேவையை மத்திய அரசு வழங்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஏ.யு.ஏ.பி. சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அஸ்லம் பாஷா கலந்து கொண்டு பேசுகையில், “பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் டவர்களையும், கண்ணாடியிழை கேபிள்களையும் தனியாருக்கு கொடுப்பதால் ரூ.40 ஆயிரம் கோடி திரட்டும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதேபோல் 4ஜி சேவையை வழங்க மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட டி.சி.எஸ் நிறுவனத்தால் தங்களுடைய PROOF OF CONCEPT -ஐ நிரூபிக்க முடியவில்லை. அந்நிறுவனம் விதித்த கெடு 2021 நவம்பர் 30 என்பதை முடிந்த நிலையில், தொடர்ந்து கால நீட்டிப்பு செய்து வருகிறது. 4ஜி சேவை வழங்குவதற்கான தொழில் நுட்பம் தன்னிடம் உள்ளது என்பதை நிரூபிக்க முடியாமல் இருக்கும் டி.சி.எஸ் நிறுவனத்தால் எப்படி சேவை வழங்க முடியும்” என்பது குறித்து விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசிற்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஹென்றி தலைமை தாங்கினார். மேலும், சுந்தர் ராஜன், பழனியப்பன், சுப்பிரமணியன், சசிகுமார், சக்திவேல் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் என மொத்தம் 50க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.