Skip to main content

ரபேல் ஆவணங்கள் தொலைந்தது என்கிறார் மோடி, குட்கா ஆவணங்கள் தொலைந்தது என்கிறார் எடப்பாடி.. இருவரையும் தொலைக்கு நேரம் இது. -பிருந்தா காரத் பேச்சு

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடந்தது. இந்த சூட்டம் தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கான  தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக மாறியது. தேர்தல் நிதியை பெற்றுக் கொண்ட அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத். அனல் பறக்க் பேசினார்..

 

brunda karadh speech

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கஜா புயலில் புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 65 பேர் உயிர் இழந்தனர். லட்சக்கணக்கான மரங்கள் சேதம் அடைந்தன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். 20 பேர் தற்கொலை செய்துகொண்டனர். அப்போது, மோடி எங்கே இருந்தார்?. தற்போது அரசியலுக்காக 15 நாடக்ளில் நான்குமுறை தமிழகத்துக்கு  ஓடோடி வருகிறார். 

 

 

தமிழக அரசு புயல் நிவாரணம் ரூ.15 ஆயிரம் கோடி கேட்டது. ஆனால் மோடி அரசு 1500 கோடி ரூபாய் கூடத் தரவில்லை. தான் டீக்கடை வைத்து இருந்ததாகவும் தனக்கு ஏழையின் துரயம் புரியும் எனவும் மோடி அடிக்கடி கூறுகிறார்.  ஆனால், மக்கள் துயரப்படும்போது அவர் எதுவும் தரவில்லை. 

 

 

அதே நேரத்தில் உண்மையான டீ மாஸ்டராக புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் நால்ரோடு சிவக்குமார் திகழ்கிறார். கஜா புயலின்போது அவரும் கடுமையாக பாதிக்கப்பட்டார். சில  லட்சங்கள்  அவருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், தனக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை எனக்கூறி கஜா புயலில் பாதிக்கப்பட்ட தனது வாடிக்கையாளர்களுக்கு தனது கடையில் வைத்திருந்த கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்தார். இவர் தான் மக்களின் துயரத்தைப் புரிந்துகொண்ட உண்மையான டீ மாஸ்டர். மோடி ஒரு மோசடி மாஸ்டர்.

 

brunda karadh speech

 

நாட்டில் ஒரு சதவிகிதம் மட்டுமே உள்ள பெரும் பணக்கார்கள் 68 சதவிகிதமான சொத்துக்களை வைத்திருக்கின்றனர். ஆனால், முதியோர், விதவை பென்சன் ஒரு ரூபாய்கூட உயர்த்தப்படவில்லை. இந்த அசமத்துவம் இயற்கையாக வந்தது இல்லை. மோடி அரசின் கொள்கையால் வந்தது. நாட்டு மக்கள் கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய துயரத்தைச் சந்தித்துள்ளனர். ஏழைமக்கள் மேலும் ஏழையாகிக்கொண்டு இருக்கின்றனர். இளைஞர்களுக்கு வேலை இல்லை. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தலித் ஆதிவாசி மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. சிறுபான்மையினர் பாதுகாப்பற்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

 

கடந்த 5 ஆண்டுகளில் 48 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளை சாகடித்துவிட்டு தற்பொழுது ரூ. 2 ஆயிரம் கொடுப்பதாக ஏமாற்றுகிறார். இதுதான் மோடி எடப்பாடி அரசுகளின் லட்சனம். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக பிரதமர் மோடி கூறி மக்களை ஏமாற்றிவிட்டார். பணமதிப்பு நீக்கம் செய்ததன் மூலம் ரூ.1 கோடி வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டது. 

 

 

மோடி அரசு ரபேல் தொடர்பான ஆவணங்கள் தொலைந்துவிட்டது என்கிறது. எடப்பாடி அரசு குட்கா ஆவணங்கள் தொலைந்துவிட்டது என்கிறது. இத்தகைய மோசடி அரசுகளுக்கு தமிழக மக்கள் நல்ல பாடம் கற்பிற்க இருக்கிறார்கள். வருகின்ற தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக, சிபிஎம், சிபிஐ, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி மகத்தான வெற்றிபெறும்.

 

 

தமிழகத்தில் 18-ம் தேதி நடைபெற உள்ள தேர்தல் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதைப்போல மத்தியில் மோடி அரசை வீழ்த்துவதோடு, தமிழகத்தில் எடப்பாடி அரசையும் வீழ்த்தும் வாய்ப்பும் தமிழக மக்களுக்கு கிடைத்திருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2014-ல் நடைபெற்ற தேர்தலில் மோடியா? லேடியா? என்று சவால் விட்டார். மோடியைவிட லேடிதான் என்று வென்றும் காட்டினார்.  தற்போது, அம்மாவை மறந்துவிட்டு மோடிதான் எங்கள் 'டாடி' என்கின்றனர்.

 

 

அனைவரும் சமம் என்று கூறும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்க பாஜக அரசு   மறுத்து வருகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தும் மோடி அரசும், அவருக்கு சின்னத் தம்பியாக செயல்படும் எடப்பாடி அரசும் அகற்றப்பட வேண்டும். இந்தியாவை, தமிழகத்தை காக்கும் மகத்தான் பங்களிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, செங்கொடி இயக்கம் செய்யும் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்