தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளிகளில் செயல்படுத்தப்படும், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் வரும் கல்வியாண்டு முதல் 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த வருடம் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு இன்று வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளார்கள்.
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளும் இந்த திட்டத்தை தங்கள் பள்ளிகளுக்கும் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் அன்று அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை தொடங்க திட்டமிட்டு திருவள்ளுவர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியான புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர். இதன்மூலம் 3,995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2,23,536 மாணவ- மாணவியர்கள் பயன் பெறுகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரிமுருகேசன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், பாறைப்பட்டி ராமன், காந்திகிராமம் அறக்கட்;டளை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத்தலைவர் தங்கமுனியம்மாள் வரவேற்றார். நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டியை அமைச்சர் ஐ.பெரியசாமி பரிமாறினார். அதன்பிறகு பேசிய அவர், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் யாரும் வெறும் வயிற்றுடன் படுக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஒருகிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என்ற திட்டத்தை அறிவித்து அதன்மூலம் தமிழக மக்களின் வயிற்று பசியை போக்கினார். அவருடைய வழியில் வந்த தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கப்பள்ளிக்கு வரும் மாணவர்கள் வெறும் வயிற்றுடன் கல்வியை கற்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கி காலை சிற்றுண்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதோடும் இன்று அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் இந்தத் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.
உலக அளவில் இந்தத் திட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறுவர்கள் வயிற்றுப்பசி இல்லாமல் நன்றாக படிக்கும் நிலைமை உருவாகி உயர்க்கல்வி கற்கும் அளவிற்கு மாணவர்கள் கல்வித்தரம் உயரும் என்றார். தமிழகத்தில் அனைவரின் நலன் காக்கும் முதல்வராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். தேர்தல் நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருவதோடு கடைக்கோடி மக்கள் வரை திட்டம் செயல்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்” என்று கூறினார். அதன்பின் விழாவில் காந்திகிராமம் ஊராட்சியைச் சேர்ந்த 16 பேருக்கு கலைஞரின் கனவு இல்லத்திட்டம் மூலம் வீடுகள் கட்டுவதற்கான ஆணையையும், ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டம் மூலம் 5 பேருக்கு ஆணையையும் வழங்கினார்.