இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. விரிவுபடுத்தும் இந்த திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் படித்த அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் அமர்ந்து உணவு அருந்தினார். மேலும் இந்த திட்டத்திற்கு பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகேயுள்ள வள்ளிபுரம் ஊராட்சி காளிங்கராயன் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக அரசின் காலை சிற்றுண்டி நேற்று முதல் அனைத்து பள்ளிகளைப் போல தொடங்கப்பட்டது. மேலும் இந்தப் பள்ளியில் நூற்றுக்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த தீபா என்பவர் சமைத்த உணவை பள்ளி மாணவர்களுக்கு பரிமாறியிருக்கிறார்.
இதற்கு, பிற சமூகத்தை சார்ந்த பெற்றோர்கள், அந்த ஊழியர் சமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் குழந்தைகளை சாப்பிடவிடாமல் நிராகரித்து அழைத்துச் சென்றுள்ளனர். இது குறித்து விவரமறிந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பிரச்சனை செய்தவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். இருந்தும் அவர்கள் காலை உணவை புறக்கணித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.