
சேலத்தில், மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் 24 மணி நேர தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சேலத்தில் கடந்த ஞாயிறன்று (ஜூலை 1, 2018) இரவு 9 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் கனமழையாக மாறியது. தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக வேகம் குறையாமல் கொட்டித்தீர்த்தது. இதனால் சேலம் மாநகரமெங்கும் வெள்ளக்காடாக மாறியது.
குறிப்பாக, கிச்சிப்பாளையம், நாராயணநகர், அசோக் நகர், பள்ளப்பட்டி, எருமாபாளையம், தாதுபாய்குட்டை, கருங்கல்பட்டி ஆகிய பகுதிகளில் சாலைகளிலும், தாழ்வான இடங்களிலும் மழைநீர் சூழ்ந்தது. தாழ்வான இடங்களில் இருந்த குடியிருப்புகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.
இந்நிலையில், நாராயணநகரைச் சேர்ந்த முஹமது ஆசாத் (15) என்ற சிறுவன் சினிமா பார்த்துவிட்டு சகோதரருடன் வீடுக்குத் திரும்புகையில், வெள்ளக்குட்டை ஓடையில் தவறி விழுந்தான். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவனை சேலம் மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள், உறவினர்கள் தீவிரமாக தேடினர். 24 மணி நேர தீவிர தேடுதலில் இன்று காலை கருவாட்டுப் பாலம் பகுதியில் வெள்ளக்குட்டை ஓடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டான்.
சடலத்தைப் பார்த்து பெற்றோர்களும், உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.