கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ளது ஈத்தாமொழி. இந்தப் பகுதியில் உள்ள தெற்குபால் கிணற்றான் விளையைச் சேர்ந்தவர் கோபி. இவருக்கு 39 வயது ஆகிறது. இவர், ஈத்தாமொழி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி தன்னுடைய பெயிண்ட் கடைகள் விடுமுறை என்பதால் 30 வயதான இவரின் மனைவி லேகா மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே செல்லத் திட்டமிட்டிருக்கிறார்.
அதன்படி, கோபி அவரின் குடும்பத்தோடு சங்குத்துறை கடற்கரைக்குப் புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, கோபி தன்னுடைய காரை வேகமாக இயக்கியதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு வேகமாகச் சென்ற கார், ஈத்தாமொழி அருகே உள்ள செம்பொன்கரை பகுதியில் சென்றபோது, காரின் முன்னால் சென்ற பைக் மீது பயங்கரமாக மோதியுள்ளது. உடனே நிலைதடுமாறி அந்த பைக் மற்றும் அதனை ஓட்டிச்சென்ற நபரும் பொத்தென்று கீழே விழுந்துள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அந்த நபர், கீழே கிடந்துள்ளார். ஆனால், அப்போதும் காரை நிறுத்தாமல் காரை தொடர்ந்து இயக்கியுள்ளார் கோபி. இதனைக் கவனித்த அக்கம்பக்கத்தினர், ஓடிச் சென்று அந்தக் காரை பிடிக்க முற்பட்டுள்ளனர். ஆனாலும் அவர் காரை நிறுத்தவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள், காரை நிறுத்துமாறு கத்திக் கூச்சலிட்டுள்ளனர். மேலும் இளைஞர்கள் காரை நிறுத்துமாறு பைக்கில் வேகமாகப் பின் தொடர்ந்து காரை விரட்டியுள்ளனர்.
ஆனால் அதற்குள் கார் சங்குத்துறை கடற்கரை அருகே சென்றுள்ளது. இப்படியே நீண்ட தூரம் காரில் சிக்கிய பைக்கோடு காரை இயக்கியதால், அந்த பைக் சாலையில் உரசி அதிலிருந்து நெருப்பு பறந்துள்ளது. அப்போதும் அந்தக் காரை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்கியதால், அதிலிருந்து அதிகமான அளவில் தீ எழுந்துள்ளது. அப்போது காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் பதறிய கோபி மற்றும் மனைவி, குழந்தைகள் காரில் இருந்து தப்பி ஓடியதாகச் சொல்லப்படுகிறது. அதே சமயம், சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை காரில் சிக்கிக்கொண்டே சென்றபோதும், கீழே விழாத பைக்கும் அந்த நபரும் அதே தீயில் கருகியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, காரில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்துள்ளனர். அதன் பின்னர், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கார் விபத்தில் சிக்கி பலியானது தெற்கு சூரங்குடி பள்ளி தெருவைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவரது மகன் அஜாஸ் என்பது தெரியவந்துள்ளது.
இவர், சுண்டபற்றிவிளை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தக் காருக்கு முன்பாக சென்று கொண்டிருந்த பைக்கை மோதியிருப்பதால், இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. அதுமட்டுமல்லாமல், விபத்து ஏற்பட்டு மாணவனும் பைக்கும் கீழே விழுந்து காரில் சிக்கிய போதும் சுமார், மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு காரை நிறுத்தாமல் அப்படியே தரதர வென பைக்கையும் மாணவனின் சடலத்தையும் இழுத்துச் சென்றது உறுதியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், காரின் முன் பகுதியில் மாணவனின் உடல் சிக்கியிருந்த நிலையில் கார் தீ பிடித்ததால் உடல் கருகி கிடந்துள்ளது. பின்னர், பொதுமக்கள் உதவியுடன் காரில் சிக்கி இருந்த சிறுவன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, சுசீந்திரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 15 வயது சிறுவன் கார் மோதி சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக உயிரிழந்த சம்பவம் கன்னியாகுமரி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மாணவனின் சடலம் மற்றும் பைக்கோடு கார் தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதனை சமூக வலைத்தளங்களில் பார்த்த பலரும் இது திட்டமிட்டக் கொலையாக இருக்கலாம் எனப் பதிவு செய்து வருகின்றனர்.