திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிமியம்பட்டு ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சுண்ணாம்பு பள்ளம் பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்து வருபவர் நந்தகுமார்- ரேவதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த ஜீலை 28ஆம் தேதி மாலை ஆறு மணி அளவில், வழக்கம் போல பசு மாட்டு பாலை கறந்து கொண்டு, பால் சொசைட்டியில் வழங்குவதற்காக ரேவதி சென்றுள்ளார். வீட்டில் அம்மாவை காணாமல் 4 வயது குழந்தை கோகுல், அம்மாவை தேடி சென்றுள்ளார்.
வீட்டுக்கு திரும்ப வந்த கோகுலின் அம்மா ரேவதி மகன் இல்லாததை கண்டு அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். நேரம் கடந்தும் குழந்தை எங்கும் கிடைக்காததால் அவரின் பதட்டம், அழுகையால் அக்கம் பக்கத்தினர் உறவினர்கள் எல்லாம் பல இடங்களில் தேடியும் கோகுல் கிடைக்கவில்லை. இவர்களின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பண்ணைக்குட்டை அமைக்கப்படுகிறது. மாவட்டத்தில் இரண்டாயிரம் பண்ணை குட்டைகள் அமைக்கப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக மழை பெய்வதால் இந்த பண்ணை குட்டைகளில் நீர் தேங்கியுள்ளன. ஒரு வேலை பண்ணை குட்டியில் குழந்தை தவறி விழுந்து இருக்கலாம் என சந்தேகப்பட்டு இளைஞர்கள் பண்ணை குட்டையில் இறங்கி தேடினர். இரவு 9 மணி அளவில் குட்டையில் இருந்து கோகுலின் சடலம் கிடைத்தது. உடனே கோகுலின் உடலை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இது குறித்து இப்பகுதி மக்கள் நம்மிடம் பேசியபோது, “எந்த ஒரு பாதுகாப்பு வசதியும் இல்லாமல் இந்த குட்டைகள் சட்டத்துக்குப் புறம்பாக தோண்டப்பட்டு வருகிறது. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆட்கள் வெட்ட வேண்டிய இந்த குட்டையை ஜேசிபி எந்திரம் மூலம் தோண்டினார்கள். இதைப்பற்றி நாங்கள் கேட்டபோது இந்த திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்தல், இந்த பகுதியில் உள்ள வீடுகளை எல்லாம் அப்புறப்படுத்தி விடுவோம் என்று அதிகாரிகள் மிரட்டுகிறார்கள்” என்றனர்.
இது தொடர்பாக பலியான சிறுவன் கோகுலின் தாயார் ரேவதி நம்மிடம், “பலமுறை கூறியும் எந்த ஒரு பாதுகாப்பு வசதியும் ஏற்படுத்தாமல், அலட்சியமாக ஜேசிபி இயந்திரம் மூலம் இந்த பள்ளத்தை அவசர அவசரமாகத் தோண்டினார்கள். சுற்றிலும் வேலி இல்லாமல் உள்ளது இதனாலேயே அதில் விழுந்து என் குழந்தை இறந்தான். இந்த அபாயகரமான பண்ணை குட்டையில் தவறி விழுந்து மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் முன் இதை மூடிவிட்டால் இப்பகுதி மக்களுக்கு நல்லது. அதோடு இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கண்ணீர் விட்டு அழுதபடி கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் நிம்மியம்பட்டு கிராம ஊராட்சியைச் சேர்ந்த சிலர் கோகுல் அந்த பண்ணைக்குட்டையில் விழுந்து உயிரிழக்கவில்லை என்று கூற வேண்டும் என்று கோகுலின் உறவினர்கள் மற்றும் தாயாரை மிரட்டியதாக கூறப்படுகிறது.