
மத்திய அரசு திட்டமான பொருளாதாரத்தில் பின்தங்கிய நலிந்த விவசாய குடும்பத்திற்கு நான்கு மாத இடைவெளியில் மூன்று தவனைகளாக வருடம் ஒன்றுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் பெரும் ஊழல் முறைகேடு தமிழகத்தில் நடந்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதற்கு முழு விசாரணை வேண்டும். ஃபோர்ஜரியாக முறைகேட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து சட்டப்படி தண்டனை தரவேண்டும். அ.தி.மு.க எடப்பாடி அரசின் சீர்கெட்ட நிர்வாகமாக இது விளங்குகிறது. இந்த முறைகேட்டுக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க எடப்பாடி அரசக்கு துணைநிற்கிறதா என எதிர்க்கட்சி தலைவரான தி.மு.க தலைவர் கேள்வி எழுப்பிய நிலையில் தமிழக பா.ஜ.க வேறுவழியில்லாமல் 'நடவடிக்கை எடு' என எல்லா மாவட்டங்களிலும் மனு கொடுக்க தொடங்கியுள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஈரோடு பாரதிய ஜனதா கட்சியின் விவசாயப் பிரிவு சார்பில் அதன் மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமையில் சில நிர்வாகிகள் திரண்டு வந்து அங்குள்ள புகார் பெட்டியில் மனுவைப் போட்டுவிட்டுச் சென்றனர். அவர்கள் அந்த மனுவில் எழுதியிருப்பதாகக் கூறியது, "பாரதப் பிரதமரின் வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 9.5 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ. 2,000 என ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் நமது தமிழகத்தில் மட்டும் 40 லட்சம் விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இந்தத் திட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரும் மோசடி நடந்துள்ளது.
கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளகுறிசி, காஞ்சிபுரம், வேலூர், கரூர், கோவை போன்ற மாவட்டங்களில் திடீரென சில நாட்களில் நாற்பதாயிரம், முப்பதாயிரம் பேர் என புதிது புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளே அல்லாத பல்லாயிரக்கணக்கானோர் மோசடியாக இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு இருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியாக உள்ளது. ஆகவே ஈரோடு மாவட்டத்திலும் இந்தத் திட்டத்தில் மோசடி நடந்திருக்க பெரும் வாய்ப்புள்ளது ஈரோடு மாவட்ட கலெக்டர் இதைத் தீவிரமாக ஆய்வுசெய்து இதில் மோசடி நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும்." என அவர்கள் கூறினார்கள்.
பா.ஜ.க. விவசாய பிரிவு மாநிலச் செயலாளர் சித்ரா கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பிரச்சார அணி சரவணன், பொதுச்செயலாளர்கள் குணசேகரன் ஈஸ்வரமூர்த்தி, மகளிர் அணித் தலைவி புனிதம் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.