
சேறு, சகதியை கரைத்து மேலே ஊற்றி பிறந்தநாள் கொண்டாடிய நபர்களின் செயல் கண்டனத்தைப் பெற்று வருகிறது. நூதன முறையில் பிறந்தநாள் கொண்டாடுவது தொடர்பான காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக பட்டாக்கத்திகளில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது, நடு சாலையில் போக்குவரத்தை மறித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது போன்ற செய்திகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். ஆனால் இதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளது.
நாமக்கல்லில் சிங்களாந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வரும் நிலையில் இன்று அவருக்கு பிறந்தநாள். இந்நிலையில் சக நண்பர்கள் பிறந்தநாள் கொண்டாட அழைத்துள்ளனர். ஆனால் அங்கு சென்ற கார்த்திக்கை மின்கம்பத்தில் கட்டிப்போட்ட இளைஞர்கள் சாணி, முட்டை, சகதி கரைசல்களை அவர் மீது ஊற்றினர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மின்கம்பத்தில் கட்டி வைத்திருந்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகும் நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.