தமிழகத்தில் புலம்பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. ஆனால் அப்படி யாரும் தாக்கப்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், “புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டுக்கே எதிரானவர்கள். வதந்தி பரப்புவோர் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள். புலம்பெயர் தொழிலாளர்களை வைத்து சிலர் கீழ்த்தரமாக அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதை தமிழர்களை விட புலம்பெயர் தொழிலாளர்கள் அழுத்தமாகச் சொல்வார்கள். புலம்பெயர் தொழிலாளர்கள், தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். யாரேனும் அச்சுறுத்தினால் காவல்துறை உதவி எண்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் தகவல் தெரிவிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் திமுக அரசும் தமிழ்நாட்டு மக்களும் அரணாக இருப்பார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் பரவிய வதந்தியை அடுத்து இன்று பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து ஐஏஎஸ் அதிகாரிகள் குழு சென்னை வந்துள்ளது. இந்த நிலையில் பீகார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன் தலைமையில் தொழிலாளர் நலத்துறை செயலாளர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவும், ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து ஐபிஎஸ் அதிகாரி தமிழ்வாணன் உள்ளிட்டோர் கொண்ட குழுவும் தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டமானது தற்போது நடைபெற்று வருகிறது.