அண்மையில் திருச்சி அம்மா மண்டபத்தில் கோவில் முன்பு குழந்தைகளைக் கையில் வைத்துக் கொண்டு பிச்சை எடுக்கும் பெண்கள் மீது பொதுமக்கள் புகார் கொடுத்ததால் போலீசாரைக் கண்டதும் பெண்கள் குழந்தைகளுடன் ஓட்டம் எடுத்த சம்பவம் நிகழ்ந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் முழுவதும் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகார்கள் எழுந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடுத்த உத்தரவின் பேரில் 28 குழுக்கள் அமைக்கப்பட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சிக்னல்கள் உள்ளிட்ட இடங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் கண்காணிக்கப்பட்டு பிடிக்கப்பட்டனர்.
இதில் பிடிபட்ட பெண்களில் பல பெண்கள் குழந்தைகளின் உண்மை பெற்றோராக இருந்தாலும் சில பெண்கள் பெற்றோர் அல்லாதவர்களாகவும் இருந்தனர். இதனால் அவர்கள் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுத்து வந்தார்களா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது வரை போலீசார் 18 பெண்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு, விசாரணையின் அடிப்படையில் அவர்களிடம் பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்திய 34 கைக்குழந்தைகளை மீட்டுள்ளனர்.