
தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை மூலம் மத்தியில் ஆளும் பாஜக அரசு மும்மொழி கொள்கை வைத்து இந்தியைத் திணிக்க முயல்வதாக திமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. மேலும் அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிராக இருக்கினறனர். ஆனால், அதே சமயம் தமிழக பாஜக தலைவர்கள் தேசிய கல்விக் கொள்கையில் எந்த இடத்திலும் இந்தியைத் திணிக்க வில்லை என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். மேலும் தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆங்காங்கே விளக்கக் கூட்டத்தையும் பாஜகவினர் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று திருச்சியில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கல்விக் கொள்கையில் விளக்கப் பொதுக்கூட்டம் பாஜக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழிசை சௌதரராஜன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர். இங்குச் செய்தி சேகரிக்க சென்ற தனியார் நாளிதழ் புகைப்பட கலைஞரையும், தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளரையும் சரமாரியாக பாஜகவினர் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் புகைப்பட கலைஞரின் சட்டை கிழிக்கப்பட்டது செய்தியாளரின் மூக்குக் கண்ணாடி உடைக்கப்பட்டது அதன் பின்னர் தகவல் அறிந்து வந்த மற்ற செய்தியாளர்கள் அதனைத் தடுக்க முற்பட்ட போது அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ‘செய்தியாளர்கள் யாரும் இங்கு இருக்கக் கூடாது; வெளியேறுங்கள்..” என வலுக்கட்டாயமாக செய்தியாளர்களை கூட்டத்தில் இருந்து பாஜக தொண்டர்கள் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலில் காயம் அடைந்த புகைப்பட கலைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.