Skip to main content

தர்மபுரி அருகே 'பி.காம்., மருத்துவர்' கைது!

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

'B.Com., Doctor' arrested near Dharmapuri!


தர்மபுரி அருகே பி.காம்., படித்துவிட்டு ஆங்கில மருத்துவமுறையில் சிகிச்சை அளித்துவந்த மோசடி நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி, பாலக்கோடு, ஜக்கமசமுத்திரம், ஜிட்டாண்டஅள்ளி, அமானி மல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எம்.பி.பி.எஸ். படிக்காத ஒருவர் நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்துவருவதாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷனிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

ஆட்சியரின் உத்தரவின்பேரில், பாலக்கோடு அரசு மருத்துவமனை மருத்துவர் பாலசுப்ரமணியம் தலைமையிலான மருத்துவக் குழுவினர், மாரண்ட அள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜூலை 7ஆம் தேதி ஆய்வுசெய்தனர். 

 

கரகூர் கிராமத்தில் உள்ள ஒரு மருந்து கடையை ஆய்வுசெய்தபோது, கடையின் உள்புறம் கிளினிக் அமைத்து, ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்துவந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். 

 

விசாரணையில் அந்த நபர் பெரிய கும்மனூரைச் சேர்ந்த சண்முகம் (45) என்பதும், அவர் பி.காம்., பட்டதாரி என்பதும், எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்துவந்த மோசடி நபர் என்பதும் தெரியவந்தது. 

 

கரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் அதிக செலவாகும் என்றும், தன்னிடம் வந்தால் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதாகவும் கூறி கிராம மக்களை ஏமாற்றி சிகிச்சை அளித்துவந்துள்ளார். மருத்துவக் குழுவினர் அளித்த தகவலின்பேரில் மாரண்டஅள்ளி காவல் நிலைய காவல்துறையினர் அவரை கைதுசெய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சைலண்டாக வீட்டில் வைத்து ஸ்கேன்; கையும் களவுமாகச் சிக்கிய பகீர் கும்பல்!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Finding baby gender at home; The gang is caught in the crosshairs

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வீட்டில் வைத்து சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்து வந்த கும்பல் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தர்மபுரி மாவட்டத்தில் இதற்கு முன்பே சில ஆண்டுகளாக கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து கூறுவது தொடர்பான கும்பல்கள் பிடிபட்டிருந்தது நிகழ்ந்திருந்தது. இந்நிலையில் நான்கு பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து ஒரு கும்பல் சோதனை செய்து தெரிவித்ததாகப் புகார்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இன்று ஊரக நலத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள நெற்குந்தி முத்தப்பா நகரில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சந்தேகம் இல்லாத வகையில் வீடு ஒன்றில் சாதாரணமாக சிசுவின் பாலினம் கண்டறிந்து கூறும் கும்பல் அதற்கான உபகரணங்களுடன் தங்கி இருப்பது தெரிய வந்தது. பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறுவதற்கு ஒருவருக்கு தலா 13,000 பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டில் அதற்கான கருவிகள் வைக்கப்பட்டு இப்படி செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதனைக் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் செய்து வந்துள்ளார். முருகேசன் மருத்துவம் படிக்காதவர் என்பதும் பனிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் சூட்கேஸ் அளவிலான ஸ்கேன் மெஷினை வைத்து வெறும் ஐந்து நிமிடத்திற்குள் கருவில் உள்ள சிசு ஆணா பெண்ணா என்பதைத் தெரிவித்து வந்துள்ளது அந்த கும்பல். தருமபுரியில் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்து வந்த கும்பல் மீண்டும் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

 ஐ.டி.ஐ படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்!  

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Fake doctor after studying ITI and practicing medicine

கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் மெடிக்கல் மற்றும் கிளினிக் சென்டர் வைத்து ஒருவர் மருத்துவம் பார்த்து வருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் செந்தில்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பந்தப்பட்ட சரவணா மெடிக்கல் சென்டர் மற்றும் கிளினிக்கில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்தக் கிளினிக்கில் சரவணன் என்பவர் போதிய மருத்துவக் கல்வி பயிலாமல் டிப்ளமோ ஐ.டி.ஐ மட்டும் முடித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து ஆய்வின்போது மூன்று நபர்களுக்கு IV FLUID TRIPS போடப்பட்டிருந்ததும் தெரியவந்தது. மேலும் மருந்தகத்தில் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டு காலாவதியான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மருத்துவம் பயிலாமல் மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்பதை அறிந்தும் அதனைச் செய்து வந்த போலி மருத்துவர் சரவணன் என்பவரை வரஞ்சரம் காவல்துறையினர் கைது செய்ததுடன் மருந்தகத்திற்கும் வருவாய்த்துறையினர் உதவியுடன் சீல் வைத்தனர்.

மருத்துவ படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்ப்பதும் கருவில் குழந்தைகளின் பாலினம் கண்டறிவதும் கருக்கலைப்பதும் சட்டப்படி குற்றம் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.