அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டியைச் சேர்ந்த பாண்டீஸ்வரி, ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடன் தவணைத் தொகையை கடந்த 2 மாதங்களாக செலுத்தாமல் இருந்திருக்கிறார். இந்நிலையில், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அண்ணாமலையும் இன்னொருவரும், கடந்த 23-ஆம் தேதி பாண்டீஸ்வரியின் வீட்டிற்குச் சென்று தவணைத் தொகையைக் கேட்டுள்ளனர். அப்போது பாண்டீஸ்வரி, கடன் தவணையைச் செலுத்த அவகாசம் கேட்டுள்ளார். உடனே அண்ணாமலையும் அந்த இன்னொருவரும் பாண்டீஸ்வரியின் சமூகத்தைச் சொல்லி இதற்குத்தான் உங்களுக்கு லோன் தரக்கூடாது என்று இழிவாகப் பேசியதோடு, ஒரு வாரத்தில் தவணைத் தொகையைச் செலுத்தாவிட்டால் உடையைக் கழற்றி உட்கார வைத்துவிடுவேன் என்று ஆபாசமாகத் திட்டியிருக்கிறார்கள்.
கடந்த 31-ஆம் தேதி, பாண்டீஸ்வரியும் அவருடைய கணவர் விஜயகுமாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் அண்ணாமலையும் மேலும் 4 பேரும் வீட்டுக்குள் நுழைந்து பாண்டீஸ்வரியின் மூத்தமகள் விசாலினியிடம், உங்க அம்மா எங்கே போய் ஒளிந்துகொண்டாள் என்று அசிங்கமாகத் திட்டிவிட்டு, விசாலினியை அந்த வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு, சாவியை எடுத்துச் சென்றுவிட்டனர். மகளது நிலையைக் கேள்விப்பட்ட பாண்டீஸ்வரியும் விஜயகுமாரும் வீட்டுக்கு வந்து மகளை மீட்டுள்ளனர்.
தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் அண்ணாமலை மற்றும் உடன் வந்த நால்வர் மீது அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலையத்தில் பாண்டீஸ்வரி புகாரளிக்க, வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவாகியிருக்கிறது.