ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்து வந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கி புகழ் பெற்றவர் பங்காரு அடிகளார். வயது 82. இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர், அவரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளார். இன்று மற்றும் இறுதிச் சடங்கு நடைபெறும் நாளான நாளை ஆகிய 2 நாட்கள் 2000 போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளார் மறைவை ஒட்டி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகக் கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தற்போது அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பக்தர்கள் திரண்டு வந்து அவரது உடலைப் பார்த்துச் செல்கின்றனர். அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரும் நேரில் வந்து தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.