கர்நாடக மாநிலம் பெங்களூர் அடுத்த பழைய பைப்பா நெல்லி கஜேந்திர நகரைச் சேர்ந்தவர் விஜயன் மகன் கௌதம் (22). அவருடைய தம்பி விவேக் (20). பெங்களூரைச் சேர்ந்த இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா வந்தனர். பின்னர் புதுவை வந்த அவர்கள் புதுவை மாநிலம் காலாப்பட்டு அருகே பேருந்து நிறுத்திவிட்டு கடற் கரையோரம் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கௌதமன் மற்றும் விவேக் இருவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். கடல் அலையில் சிக்கிய கௌதமை காப்பாற்றச் சென்ற விவேக் கடலில் மூழ்கி தத்தளித்தார். சிறிதுநேரம் இருவரையும் காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இருவரையும் தேடி பார்த்த போது சிறிது நேரத்தில் இரண்டு உடல்களும் கரையில் ஒதுங்கியது.
இதுகுறித்து ஆரோவில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆன்மீக சுற்றுலா வந்த இடத்தில் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி இருவரும் கடலில் மூழ்கி பலியான சம்பவம் உறவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.