தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக தனக்கு எதிரான வழக்கில் தனது கருத்தையும் கேட்கவேண்டும் என காஞ்சி சங்கராச்சாரியார் விஜேயந்திரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை மியூசிக் அகாடமியில் கடந்த ஜனவரி 23ல் ஆளுனர் முன்னிலையில் சமுஸ்கிருத - தமிழ் அகராதி வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட விஜயேந்திரர், நிகழ்ச்சி தொடக்கத்தின் போது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காமல் இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக கூறி தந்தை பெரியார் திராவிட கழகத்தின் துணை தலைவரான வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, சென்னை எஸ்பிளானேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விஜயேந்திரர் மீது வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நிகழ்ச்சி நடந்த இடம் ராயப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள் வருவதால், மனுதாரரின் புகார் எஸ்பிளனேடு காவல் நிலையத்திலிருந்து மாற்றப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், இந்த மனு தொடர்பாக தனது தரப்பு வாதத்தை முன் வைக்க அனுமதிக்க வேண்டுமென விஜேந்திரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து மனு மீதான விசாரணையை பிப்ரவரி 28ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.