Skip to main content

முறையற்ற உறவில் பிறந்த குழந்தையைக் கொன்ற கொடூர தாய்

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

Baby passed away police arrested her mother and grandmother Baby passed away police arrested her mother and grandmother

 

வலங்கைமான் அருகே முறையற்ற உறவில் பிறந்த ஆண் குழந்தையை கொடூரமாக கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த  தாயையும், பாட்டியையும் போலீசார் கைதுசெய்துள்ளனர்.

 

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்துள்ள சாரநத்தம் ஊராட்சி வேடம்பூர் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் முத்து, இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணவருடன் கோபித்துக்கொண்டு ரேணுகா தனது தாய்வீட்டில் கடந்த ஏழு ஆண்டுகளாக குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கணவர் முத்து திருப்பூரில் வேலைபார்த்துக்கொண்டு அங்கேயே இருந்துவருகிறார்.

 

இந்தநிலையில் வறுமையை போக்க குடவாசல் பகுதியில் உள்ள ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்ற ரேணுகாவிற்கு, அந்த கடையில் வேலைபார்த்த, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அது திருமணத்தை மீறிய உறவாக மாறி, அந்த தவறான உறவின் காரணமாக ரேணுகா கர்ப்பமடைந்துள்ளார். 


அதனைத் தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 19ஆம் தேதி ரேணுகாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அங்கிருந்து 24ஆம் தேதி குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்ற ரேணுகா, பெற்ற பச்சிளம் குழந்தையை கொன்று வீட்டின் பின்புறம் புதைத்துவிட்டதாக போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது.


அதிர்ச்சி அடைந்த போலீசாரும், தாசில்தாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் ரேணுகாவும் அவரது தாயார் ரேவதியும் கொன்று புதைத்தது தெரியவந்துள்ளது.


இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "24ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவமனையிலிருந்து ரேணுகாவும், அவரது அம்மா ரேவதியும் சிசுவை தூக்கிக்கொண்டு வேடம்பூரில் உள்ள ரேவதி வீட்டிற்கு வந்துள்ளனர். அரசு பஸ்ஸில் வந்து இறங்கியவுடனே முறையற்ற உறவால் பிறந்த குழந்தையை வீட்டில் எடுத்துச் செல்லக்கூடாது, ஊரில் அவச்சொல் ஏற்படும் என யோசித்த இருவரும், பச்சிளம் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டனர். குழந்தையை கழுத்தை நெறித்து வீட்டிற்கு கொண்டு போய் பாத்திரத்தில் மூடி வைத்து, அதிகாலையில் குழந்தை இறந்துவிட்டதாக புரளியாக்கிவிட்டு, வீட்டிற்கு பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளனர். உண்மையை கண்டறிந்த காவல்துறை வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளோம்" என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்