https://nakkheeran.in/special-articles/special-article/one-day-indias-finest-school
"சத்தியமா இது அரசுப் பள்ளி தான்.. ஒரு நாள் இந்தியாவின் தலைசிறந்த பள்ளியாகும்.." என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் மாங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சிறப்புகளை ஜூன் 11ந் தேதி நக்கீரன் இணையதளத்தில் சிறப்புக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம்.
இந்த செய்தியை பார்த்த பலரும் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டியதுடன் பள்ளியின் வளர்ச்சிக்காக பல உதவிகளும் செய்தனர். இந்த நிலையில் தான் தமிழக அரசின் கல்வித்துறையின் உயரிய விருதான புதுமைப் பள்ளி விருதுக்கு மாங்குடி பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளதை பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுக்காக விண்ணப்பமே செய்யாத நிலையில் பத்திரிக்கை ஊடக செய்திகளை
அடிப்படையாகக் கொண்டு கல்வித் துறை அதிகாரிகளே இந்தப் பள்ளியை தேர்வு செய்துள்ளனர். அதாவது தமிழக அரசு பள்ளிகளில் கல்வி, சுற்றுசூழல், சுகாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை கொண்டு வர முயன்று வரும் நிலையில் மாங்குடி பள்ளி அதையெல்லாம் பல படிகள் கடந்துள்ளதால் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளது.
உதாராணமாக பயோ மெட்ரிக் முறையை ஜூலை இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் மாங்குடி பள்ளி கடந்த ஆண்டு முதலே இந்த முறையை பயன்படுத்தி வருகிறது. அதாவது தமிழகத்தின் முன்மாதிரி பள்ளிகளில் ஒன்றாக உள்ளது. திங்கள்கிழமை காலை தலைமைச் செயலகத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விருது வழங்கி ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.
இந்த விருதை பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு முழுவதும் 57 பள்ளிகளுக்கு விருது கொடுக்கப்படும் நிலையில் முதலில் 4 பள்ளிகளுக்கு முதலமைச்சர் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென மாங்குடி பள்ளியும் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் 5 பள்ளிகளுக்கு முதல்வர் விருது வழங்கினார். அதில் முதலில் மாங்குடி பள்ளிக்கு விருது வழங்கப்பட்டது. நக்கீரன் வெளிக்காட்டிய பள்ளிக்கு விருது கிடைத்திருப்பது பெருமைப்பட வைத்துள்ளது.
https://nakkheeran.in/special-articles/special-article/one-day-indias-finest-school