10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதும்போது பொதுவாக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் என 5 பாடங்களுக்கு தேர்வு எழுதுவார்கள். அதே சமயம் தமிழ் அல்லது ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்கள் தமிழ்நாடு தமிழ் கல்விச் சட்டம் 2006 இன் படி விருப்பப் பாடமாக உருது, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பாடங்களை தேர்வாக எழுதுவார்.
இத்தகைய சூழலில் விருப்பப் பாடத்தை தவிர்த்து மற்ற 5 பாடங்களின் மதிப்பெண்கள் மட்டுமே மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறும் வகையில் அச்சிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறையில் மாற்றம் செய்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதாவது விருப்பப் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி விருப்பப் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.