கள்ள நோட்டுகளை அச்சிட்டு சென்னையில் புழக்கத்தில் விட்ட முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வழக்கறிஞர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காய்கறி கடையில் தங்களிடம் சிலர் கள்ள நோட்டுகளை கொடுத்து விட்டு காய்கறிகளை வாங்கிச் சென்றதாக கடைக்காரர் தினேஷ் என்பவர் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமும் அளித்திருந்தார். இந்நிலையில் காய்கறி கடையில் முதியவர் ஒருவர் மூன்று கள்ள ஐநூறு ரூபாய் நோட்டுகளை கொடுத்து காய்கறிகளை வாங்கிச் சென்றது தெரிய வர போலீசாருக்கு தினேஷ் தகவல் கொடுத்தார்.
போலீசார் உடனடியாக அந்த முதியவரை விசாரித்ததில் அவர் பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அண்ணாமலை என்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல் அடிப்படையில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். அவருடைய வீட்டிலிருந்து கட்டு கட்டாக சுமார் 45 லட்சம் மதிப்புடைய கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். 'கோடீஸ்வரன்' என்ற பெயரில் விளம்பரப்படம் எடுப்பதற்காக அந்த நோட்டுகளை அச்சடித்ததாகத் தெரியவர, போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்துக் கொடுத்த குமார் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.