விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அபிராமி நகரில் அரசு டாஸ்மார்க் மதுபானக்கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையில் அதே ஊரைச் சேர்ந்த மோகன் தாஸ் கண்காணிப்பாளராகவும். அருணாச்சலம் மற்றும் சிவலிங்கம் ஆகிய இருவரும் விற்பனையாளர்களாகவும் பணி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சுமார் 9 மணி அளவில் கண்டாச்சிபுரம் பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் ஷட்டரை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு மூன்று ஊழியர்களும் அன்றைய மதுபான விற்பனை செய்த பணத்தை எண்ணி சரி பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது கடையின் வெளிப்பக்கம் இருந்து ஷட்டரை சிலர் தட்டியுள்ளனர். ஆனால் ஊழியர்கள் ஷட்டரை திறக்கவில்லை. நீண்ட நேரமாக தொடர்ந்து தட்டிக் கொண்டே இருந்ததால் யார் இப்படித் தட்டுவது என்று பார்ப்பதற்காக ஷட்டரை திறந்துள்ளனர். திடீரென்று 6 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து, ஊழியர்கள் 3 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு வசூலான சுமார் 4 லட்சம் பணத்தையும் ஊழியர் சிவலிங்கம் அணிந்திருந்த அரை பவுன் மோதிரத்தையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
ஊழியர்கள் அருணாச்சலம், சிவலிங்கம் ஆகியோருக்கு லேசான காயமும், கண்காணிப்பாளர் மோகன்தாஸ் முகத்தில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து உடனடியாக கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த காவலர்கள் மூவரையும் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த மோகன்தாஸ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன், செஞ்சி டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் ஜீவராஜ், மணிகண்டன், எஸ்.ஐ.அன்பழகன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தி உள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளைத் தேடி வருகின்றனர், காவல் நிலையம் அமைந்துள்ள ஊரில் டாஸ்மாக் கடையில் புகுந்து ஊழியர்களைத் தாக்கிவிட்டு பணம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் கண்டாச்சிபுரம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.