திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை – கள்ளக்குறிச்சி சாலையில் உள்ள தேனிமலை அடுத்த சமுத்திரம் கிராம எல்லையில், ஆற்காடு லூத்தரன் திருச்சபை உள்ளது. இந்த சபையில் கடந்த 28 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவு மதவெறி விஷமிகள் சிலர் திருச்சபையின் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருச்சபையின் பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும் ஆற்காடு லூத்தரன் திருச்சபைக்கு அருகில் ரோமன் கத்தோலிக்க குழந்தை இயேசு ஆலயம் பெரியளவில் உள்ளது. அந்த ஆலயத்திற்குள் நுழைய இரண்டு வழிகள் உள்ளன. இரவில் கேட் பூட்டு போட்டு சாத்தப்படுவது வழக்கமாம். அதே ஆகஸ்ட் 28ந்தேதி இரவு கேட்டை வழக்கப்படி பூட்டி வைத்திருந்துள்ளனர். மூடப்பட்ட கேட்டின் பூட்டை உடைக்க சிலர் முயற்சித்துள்ளனர்.
சத்தம் கேட்டு ஆலயத்திற்கு உள்ளே இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபொழுது மதவெறி விஷமிகள் அங்கிருந்து ஓடியுள்ளனர். இதுப்பற்றி இரண்டு சபை நிர்வாகிகள் சார்பில் திருவண்ணாமலை தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் தந்தும் காவல்துறை சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுவரை தேவாலயத்தை சேதப்படுத்திய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திருவண்ணாமலை மாவட்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவக்குமார், திருவண்ணாமலை காவல்துறை உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள், வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள், தாக்குதல் நடத்திய 6 பேரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.