சென்னை டி.பி சத்திரத்தில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் உதவி காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டி.பி சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மதுபோதையில் தன்னுடைய ஆறு வயது குழந்தையை பொதுஇடத்தில் வைத்து தாக்குவதாகவும், அரைநிர்வாணமாக நின்று கொண்டு சாலையில் செல்லக்கூடிய பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவதாகவும் காவல் கட்டுப்பாட்டுக்கு அறைக்கு தகவல் கிடைத்தது.
கிடைத்த தகவலின் அடிப்படையில் டி.பி சத்திரம் உதவி காவல் ஆய்வாளர் கலைச்செல்வி சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். மதுபோதையில் இருந்த நேபாளத்தைச் சேர்ந்த அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்திய கலைச்செல்வி, அருகில் இருந்த பெண்களிடமிருந்து ஆடையை வாங்கி அவருக்கு கொடுத்ததோடு, குழந்தையைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்பொழுது திடீரென அந்த இளம்பெண் காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை தாக்க முயன்றுள்ளார். இதனால் கலைச்செல்வியின் முகத்தில் நகக் கீறல் பட்டு வீக்கம் ஏற்பட்டது. உடனடியாக கலைச்செல்வி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து டி.பி சத்திரம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. மேற்கொண்ட விசாரணையில் நேபாளத்தைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் சீதா (26) என்பது தெரிய வந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான உதவி காவல் ஆய்வாளர் கலைச்செல்வி அண்மையில் ரோகித் என்ற ரவுடியை சுட்டுப் பிடித்த பெண் காவல் உதவி ஆய்வாளர் என்பது குறிப்பிடத்தகுந்தது. ரவுடியை சுட்டுப் பிடித்ததற்காக காவல் ஆணையரிடம் பாராட்டையும் பெற்றிருந்தார். இந்நிலையில் மது போதையில் சுற்றித்திரிந்த நேபாள பெண்ணால் அவர் தாக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.