Skip to main content

டெல்லியையும், புதுச்சேரியையும் செயல்படவிடாமல் தடுக்க பா.ஜ.க ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி!

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மத்திய பாஜக அரசின் பாரபட்சம் ஆகியவற்றை கண்டித்தும்,  39 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் - திமுக எம்எல்ஏக்கள்,  கம்யூனிஸ்டுகள்,  விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆறாவது நாளாக ஆளுநர் மாளிகை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் நாராயணசாமியை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். 

 

puducherry

அப்போது அவர் கூறியதாவது :- 

 

புதுச்சேரி மக்களின் விருப்பத்தின் படிதான் முதல்வர் நாராயணசாமி தேர்வு  செய்யப்பட்டுள்ளார். ஆனால் டெல்லியில் தோற்றுப்போனவர்கள் புதுச்சேரியை ஆளலாம் என நினைக்கிறார்கள். முதல்வர்,  அமைச்சர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது.

அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் கிரண்பேடியின் செயல் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. 

 

puducherry

 

டெல்லியையும், புதுச்சேரியை செயல்படவிடாமல் தடுக்க அனில் பைஜால், கிரண்பேடி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனை அவர்கள் செய்யாவிட்டால் இரண்டு நிமிடத்தில் தூக்கியடிக்கப்படுவார்கள்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுதான் மக்களின் விருப்பத்தையும், எண்ணத்தையும், பிரதிபலிக்கும்.  கிரண்பேடி சர்வாதிகாரி போன்று அரசு நிர்வாகத்தை முடக்கி ஜனநாயகத்தை சாகடிக்கிறார். 

 

படுதோல்வியடைந்த ஒருவர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை அவமரியாதை செய்வது, மக்களை அவமானப்படுத்துவதுதான். டெல்லியும் புதுச்சேரியும் மாநில அந்தஸ்துக்காக சட்ட ரீதியாகவும்,  ஜனநாயக ரீதியாகவும் இணைந்து பயணிக்கும்.

 

puducherry

 

டெல்லியும்,  புதுச்சேரியும் ஒரே படகில்தான் செல்கிறது, மக்கள் மூழ்க மாட்டார்கள். யார் வேண்டுமானால் ஆட்சிக்கு வரலாம், ஆனால் மக்கள் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் இருக்க வேண்டும். 

நான் ஆம் ஆத்மி கட்சிக்காரனாக இங்கே வரவில்லை இது போன்று பாதிப்பை சந்திக்கும் டெல்லி மாநிலத்தின் முதல்வராக வந்திருக்கிறேன். 

இதனை அரசியலாக பார்க்கக்கூடாது" என்றார்.

 

இந்நிலையில் ஆறாவது நாளான இன்று கிரண்பேடியை திரும்ப பெற கோரி ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர்க்கு காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் அஞ்சலட்டை அனுப்பினர். 

 

 

சார்ந்த செய்திகள்