ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடன் தாக்கல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அண்மையில் அப்போலோ மருத்துவர்கள் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியிருந்தது. இதற்கு முன்பே பலமுறை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது.
2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விசாரணை ஆணையம் தனது விசாரணையை கடந்த ஏப்ரல் மாதம் இறுதியிலேயே முடித்துவிட்டது. மே மாதம் முழுவதும் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் 12வது அவகாசம் முடிவடைந்த நிலையில், அறிக்கையை அதற்குள் முடிக்க முடியாது எனவே அறிக்கையை தயார் செய்ய மேலும் ஒரு மாத காலமும், கூடுதலாக ஏழு நாட்களும் எடுத்துக் கொள்ள அவகாசம் கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தாக்கல் செய்தது. 600 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நாளை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக முன்னாள் அமைச்சர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த நபர்கள் என மொத்தமாக 158 பேர்களிடம் பலகட்ட விசாரணைகள் நடைபெற்றது. எய்ம்ஸ் மருத்துவக் குழு தாக்கல் செய்த அறிக்கையும் ஆறுமுகசாமி ஆணையம் அளிக்கப்போகும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. ஜெயலலிதாவிற்கு இருந்த உடல் உபாதைகள், நோய்களுக்கு அவர் எடுத்துக்கொண்ட சிகிச்சைகள், உட்கொண்ட மருந்துகள் என இதுவரை இருந்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் இந்த அறிக்கை இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.