அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முறைகேடுகள் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, குரூப் 4 தேர்வுகளில் முறைகேடுகள் செய்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த முறைகேடுகள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இடைத்தரகர் ஜெயகுமாருடன் பணியாற்றிய சம்பத் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் உள்ள அவர், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, முதன்மை அமர்வு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி செந்தில் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, இடைத்தரகர் ஜெயகுமாருக்கு உடந்தையாக சம்பத் செயல்பட்டுள்ளதாகவும், விடைத்தாள்களை திருத்த உதவியதாகவும் கூறிய அரசுத்தரப்பு வழக்கறிஞர், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, சம்பத்திற்கு ஜாமீன் வழங்க மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.