திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த கஜேந்திரன் போட்டியிட்டார். தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் ஆரணி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன், தனது கிராமத்தில் அதிக வாக்குகள் இரட்டை இலை பெற வேண்டும் என்பதற்காக தனது பலத்தை காட்ட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு தலா நூறு ரூபாய் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.
வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக அதிமுக சேவூர் கிளை அவை தலைவர் ராமதாஸிடம் பணம் தந்து ஒவ்வொரு வீடாக தரச் செய்திருக்கிறாராம். பின்னர், ஓட்டுக்கு பணம் தந்து விட்டு மீதி பணத்தை கொண்டு வந்து எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனிடம் ராமதாஸ் வழங்கியிருக்கிறார். அப்போது எனக்கு தேர்தல் வேலை செய்யுங்க என்றால் மட்டும் உங்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கு, ஆனா கஜேந்திரனுக்காக விழுந்து விழுந்து வேலை பாக்குறீங்க என பேச்சு வாக்கில் கூறியுள்ளார். இதில் கடுப்பாகி ராமதாஸ் பதில் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தின் ஒரு பகுதியாக நான் தான் உன் மகளுக்கு 2001-ல் தையல் மிஷின் வழங்கினேன் என எம்.எல்.ஏ கூறினார். இதில் கோபமான ராமதாஸ் தனது மகள் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த தையல் மிஷினை கொண்டு வந்து முன்னாள் அமைச்சரின் வீட்டில் வைத்தனர். அப்பொழுது அவரின் மனைவி இதை எதுக்கு இங்க கொண்டு வரீங்க என கேட்ட போது, “உன் புருஷன் தான் தையல் மிஷினை கொடுத்தேன் அப்படின்னு சொல்லி காட்டுகிறார். இது அரசின் நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது தான். இருந்தாலும் உன் கணவர் வழங்கினேன் என சொன்னதால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..” என சொல்லி விட்டு தந்தையும், மகளும் வந்துவிட்டனர்.
இப்போது இது ஆரணி அதிமுகவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சேவூர் ராமச்சந்திரனின் எதிர்கோஷ்டியினர் எடப்பாடி பழனிசாமி வரை புகார் சொல்லி பஞ்சாயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.