சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறை மாணவர்கள் தேர்வு மதிப்பெண்ணில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதனைக் கேட்கச்சென்ற மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் அத்துறைத் தலைவர் சொளந்தர்ராஜன் மீது குற்றம்சாட்டி தொடர்ந்து இரண்டு நாட்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் குறித்து நம்மிடம் பேசிய பல்கலைக்கழக மாணவர் சிவபிரகாஷ், “நாங்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் படிக்கிறோம். விடுதி உணவுக் கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடினோம். அதற்காக எங்களை தொல்லியல் துறைத் தலைவரும், பேராசிரியருமான சொந்தரராஜன் திட்டமிட்டு 8 மாணவர்களை தேர்ச்சியடையவிடாமல் செய்துவிட்டார். உடனே, நாங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டோம். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை.
தொடர்ந்து போராட்டம் நடத்தினோம். அப்போது, எங்களது தேர்வுத்தாள்களை மீண்டும் மறுபரிசீலனை செய்வோம் என சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் பதிவாளர் கூறியதால் போராட்டத்தை முடித்துக்கொண்டு அகழாய்வுப் பணியைத் தொடர வேலூர் சென்றுவிட்டோம். எங்கள் அகழாய்வுப் பணிகள் முடிந்து துறைக்குச் சென்று எங்கள் மதிப்பெண்களை விசாரித்தோம். இரண்டு நாட்களாக எங்களை அலையவிட்டார்கள். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டோம். இறுதியாக எங்களது மதிப்பெண்களை வாய்வழியாகக் கூறினார்கள். அதில், அனைவருமே தேர்ச்சி அடைந்திருந்தோம். மதிப்பெண்களை வழக்கமாக பல்கலைக்கழகத்தின் விதிப்படி, நோட்டிஸ் போர்டில் போடுங்கள் என்று கூறியதற்கு, துறைத் தலைவர் சௌந்தரராஜன், எங்களை நோக்கி தகாத வார்த்தைகளால் திட்டியும் எங்களை தாக்கியும் வெளியே அனுப்பினார். உடனிருந்த சக மாணவி ஒருவரிடம் அத்துமீறலிலும் ஈடுபட்டார்.
நாங்கள் எதிர்த்துக் கேட்டபோது, அவர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே சென்றுவிட்டார். இந்த விவகாரத்தை நாங்கள் பல்கலைக்கழக நிர்வாகியிடம் எடுத்துக்கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. இதனால், துறைத் தலைவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல், அவருக்கு உடந்தையாக இருக்கும் பதிவாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறினார்.
இதுகுறித்து தொல்லியல் துறைத் தலைவர் சௌந்தரராஜனை விசாரித்தபோது, “மாணவர்கள் என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள், அவர்கள் கேட்ட கோரிக்கையை நிறைவேற்றிவிட்டோம்” என்று கூறினார். பல்கலைக்கழக விதிமுறையின்படி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்று மாணவர்கள் குற்றச்சாட்டு முன்வைக்கிறார்களே என்று கேட்டபோது, ‘நான் பிறகு பேசுகிறேன்’ என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
- சேகுவேரா